Monday, 17 November 2014

கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்தால் கடும் நடவடிக்கை ஸ்கேன் மையங்களுக்கு எச்சரிக்கை









திண்டுக்கல்,

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பாலினம் குறித்து தகவல் தெரிவித்தால், ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நலப்பணிகள் இணை இயக்குநர் ரவிகலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்துக்கு புறம்பான கருக்கலைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை காட்டிலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 16 சதவீதம் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதை ஆய்வு செய்யும் போது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிந்து சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களுக்கான ஆய்வு கூட்டம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது.

பாலினம் அறிய தடை

கூட்டத்துக்கு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ரவிகலா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம், வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்ள மட்டுமே ஸ்கேன் கருவியை பயன்படுத்த வேண்டும். குறைந்து வருகிற பெண் பாலின விகிதாச்சாரம் சமூகத்தில் பல்வேறு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆண், பெண் பாலினத்தை சமநிலைக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம் ஆகும். கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் கருவின் தன்மையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் சட்டம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமலில் உள்ளது.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் உள்ள கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் கருவி மூலம் கண்டறிவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் ஸ்கேன் மையத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸகேன் மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும் தவறு செய்த டாக்டருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். மருத்துவ கவுன்சில் பதிவில் இருந்து டாக்டரின் பெயரை 5 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும். முறையாக பராமரிக்காத, மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்காத ஸ்கேன் மையங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

இவ்வாறு நலப்பணிகள் இணை இயக்குநர் ரவிகலா பேசினார். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஸ்கேன் மைய டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment