திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மாதங்களில் 10 ஆயிரத்து 332 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 397 பேர் பலியாகி உள்ளனர். சிக்கலான சாலைகள், விதிமீறல்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வாகன பெருக்கம்
நவநாகரீக உலகத்தில் வாகனங்க ளின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது. ஆடம்பரத்தை பலரும் விரும்புவதன் விளைவு இன்று சாலைகளில் அணிவகுக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவுக்கு பெருகிவிட்டது.குறிப்பாக மோட்டார் சைக்கிள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அதன் எண்ணிக்கை தற்போது பெருகி உள்ளது. மோட்டார் வாகனங்களின் ஆக்கிரமிப்புகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை காட்டினாலும், பெருகி வரும் வாகனங்களால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நிதர்சனமான உண்மையாகும்.
சிக்கலான சாலைகள்
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை விபத்துகள் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதற்கு சிக்கலான சாலைகளே முதன்மையான காரணங்களாக இருக்கின்றன. குறிப்பாக திண்டுக்கல் நகர்பகுதியில் சாலைகள் குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றன.இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் முறையானதாக அமைக்கப்படவில்லை. வலை பின்னலான சாலைகளால், விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதே போல், மாவட்டத்தில் அதிகளவு சாலை சந்திப்புகள் உள்ளன. இந்த சந்திப்பு பகுதிகளில், வேகமாக வருபவர்களாலும், கவனக்குறைவால் வாகனம் ஓட்டுபவர்களாலும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன.
விதிமீறல்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்- கரூர், திண்டுக்கல்- திருச்சி ஆகிய நான்கு வழிச்சாலைகள் செல்கின்றன. இந்த சாலைகளில் கண்மூடித்தனமாக பயணிப்பவர்களால் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
நகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிக்னல்களுக்கு மதிப்பு கொடுக்கப்படுவது இல்லை. பலர் சாலை விதிகளை கடைப்பிடிப்பதே கிடையாது. இதற்கு காரணம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் முறையாக தண்டிக்கப்படாததே ஆகும். விதிகளை பின்பற்றாதவர்களால், மற்றவர்கள் ஏராளமானோர் விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு வழிச்சாலையில் எதிரே பயணிப்பவர்கள், வாகனங்களை வேகமாக ஓட்டுபவர்கள், தடை செய்யப்பட்ட பகுதியில் காற்று ஒலிப்பானை பயன்படுத்தும் தனியார் பஸ்கள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள், வலை பின்னலான சாலைகள், பல்லாங்குழி சாலைகள் உள்ளிட்டவைகளால் விபத்துகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
10 மாதங்களில் 397 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 10 மாதங்களில் 10 ஆயிரத்து 332 வாகன விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக மாதத்துக்கு 1000 விபத்துகள் அரங்கேறுகின்றன. இதுவரை நடந்துள்ள வாகன விபத்துகளில் 397 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆயிரத்து 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் 10 பேர் வாகன விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். சிக்கலான சாலைகள் மாற்றப்படும் போதும், வாகன விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படும்போதும் நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரிக்கும் விபத்துகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. விடுமுறை தினமான அன்றைய தினம் மது விற்பனையும் சூடு பிடிக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால், ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. அவர்களால், அப்பாவி மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில், விபத்தில் காயம் அடைந்து அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
“தலைக்கவசம் உயிர் கவசம்”
திண்டுக்கல்லில் எப்போது?
தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவதால், விபத்துகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனாலும் உயிர் இழப்புகளை தவிர்க்க முடியும். சென்னை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் அந்த தடை தற்போது இல்லை. இதனால், தலைக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அவர் சென்ற பின், அந்த உத்தரவும் காற்றில் பறந்துவிட்டது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்விக்கான விடைக்காக சமூக ஆர்வலர்கள் காத்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment