Saturday, 10 January 2015

அரசு மருத்துவமனைக்கு ரூ.38 லட்சத்தில் நவீன இயந்திரம்

திண்டுக்கல், : அரசு மருத்துவமனைக்கு ரூ.38 லட்சத்தில் ரத்த உட்கூறு களை பிரிக்கும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப் பட்டு வருகிறது. திண்டுக்கல், வேடசந்தூர் நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு உள்நோயாளிகளாக 450 பேரும், வெளிநோயாளிகளாக 800க்கும் மேற்பட்ட பேரும் வந்து செல்கின்றனர்.
மேலும் நாள்தோறும் 15 பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கியில், தற்போது ரூ.38 லட்சம் மதிப்பில் ரத்த உட்கூறுகள் பிரிக்கும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள், சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, கிர்யோ பிரிசிப்டேட் உள்ளிட்டவைகளை பிரித்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  தேவையானவை மட்டும் செலுத்த முடியும்.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புச்செல்வன் (பொ றுப்பு) கூறுகையில், நவீன இயந்திரம் மூலம் பிரசவ நோயாளிகளுக்கும், ரத்த சோகை, ரத்தம் உறைய வை க்க, புரதசத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் தேவைப்படும் அணுக்கள் மட்டும் பிரித்து வழங்கலாம்.
இதனால் 1 யூனிட் ரத்தம் 3 வெவ்வேறு நோ யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
மேலும் திண்டுக்கல் அரசு ரத்த வங்கியில் நாளு க்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும்.
பிரசவ நோயளிகளுக்கு அதிகளவு ரத்தம் தேவைப்படுகிறது. தங் களின் பிறந்தநாள், திருமண நாள், விஷேச தினங்களில் ரத்தம்தானம் வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என் றார்.

வேலைவாய்ப்பு இலவச பயிற்சி

திண்டுக்கல், :  திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் பொதுவான தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 45வயதிற்குள் இருக்க வேண்டும். எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி காலத்தில் உணவும் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பத்துடன் ரே ஷன் கார்டு நகல், வாக்கா ளர் அடையாள அட்டை, கல்விச்சான்று நகல், பாஸ் போர்ட் அளவு போட்டோ மூன்று ஆகியவற்றை இ ணைக்க வேண்டும். விருப் பம் உடையவர்கள் திண்டுக்கல் நேருஜி நகர், ஜான் பால் வளாகம், டிஎம்எஸ் எஸ் கட்டட வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தை நேரிலோ 94426 28434 99408 35147 ªன்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ள லாம். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். பயிற்சி முடிந்தபின் வங்கிக்கடன் உதவிக் கும் பரிந்துரை செய்யப்ப டும் என்று இயக்குநர் முருக ராஜ் தெரிவித்துள்ளார்.

ஜூடோ போட்டி ஈரோடு, சேலம் கல்லூரி சாம்பியன்


 













ஒட்டன்சத்திரம், : அண்ணா பல்கலை கழக மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் ஈரோடு, சேலம் கல்லூரிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
 ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையே ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் 18 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண் டன.
அண்ணா பல்கலைக் கழக விளையாட்டு கழக துணை இயக்குனர் பாலகுமாரன் போட்டியை துவக்கி வைத்தார்.
ஆண்கள் 90 கிலோ எடைப் பிரிவில் கே.எல்.என் கல்லூரி அருண்பிரசாத் முதல் இடத்தை பிடித்தார். கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி மாணவர் அரவிந்த் இரண்டாவது இடத்தையும், 56 கிலோ எடைப்பிரிவில் ஈரோடு வெள்ளா ளர் பொறியியல் கல்லூரி பாலகிருஷ்ணன் முதல் இடத்தையும், திண்டிவனம் மயிலம் பொறியியல் கல்லூரி சேக்ஜபீர் செரீப் இரண்டாவது இடத்தையும், கிறிஸ்தவ பொறியல் கல்லூரி மாணவர் வீரமுத்து மூன்றாவது இடத்தையும், பெண்கள் பிரிவில் நிசாந்தி,வசந்தி,கஸ்தூரி வேறுபட்ட எடைப்பிரிவுகளில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
மேலும் இக்கல்லூரியை சேர்ந்த திவ்யா மற்றும் அனிதா முதலிடத்தினை பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை ஈரோடு வெள்ளாளர் பொறியியல் கல்லூரியும், சேலம் சோனா பொறியியல் கல்லூரியும் பகிர்ந்து கொண்டன.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் முதல்வர் கெசிசெல்வவிசிலா முன்னிலை வகித்து வெற்றிபெற்ற அணியினருக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்தினால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கலெக்டர் அறிவுரை

திண்டுக்கல், : மாணவர்கள் கல்வியுடன் விளை யாட்டு துறையிலும் திறமை களை வெளிப்படுத்த வேண் டும். இதன்மூலம் வேலைவாய்ப்பில் முன்னு ரிமை பெறலாம் என்று கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள் ளார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நிறைவுவிழா நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் தலை மை வகிக்க, எம்பி உதயக்குமார், மேயர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை  கித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது: கிராமப்புர விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கு பெற வை க்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் கல்வியு டன் விளையாட்டு துறையி லும் திறமைகளை வெளிப்படு த்த வேண்டும்.
இதன் மூலம் வேலைவாய்ப்பில் முன்னு ரிமை பெறலாம் என்றார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

பனி தாக்குதலில் இருந்து மலர செடிகளை பாதுகாக்க ஏற்பாடு

    


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனி தாக்குதலில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறும். இதையொட்டி பல்வேறு வகையான 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கொடைக்கானல் பகுதியில் குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனால் இரவு வேளையில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

எனவே மலர் செடிகள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பனியின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க தோட்டக்கலைத் துறையினர் செடிகளின் மீது நிழல் வலைகளை அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். இதற்காக மலர் செடிகளின் மேல் பந்தல் அமைக்கப்பட்டு அதன்மீது வலைகள் போர்த்தப்பட்டுள்ளன.

நிழல் வலைகள்

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு 3 லட்சம் மலர் செடிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் வருகிற ஏப்ரல் மாதம் பூக்க தொடங்கி ஜூன் மாதம் வரை இருக்கும். இதனை பாதுகாக்க நிழல் வலைகள் அமைத்துள்ளோம். தற்போது வரை நீர்ப்பனியே நிலவி வருகிறது. உறைபனி நிலவினால் மலர் செடிகள் கருகும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். 

இருசக்கர வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து

     



திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளையை தடுக்க 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்ல உள்ளனர். பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் கொடுக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

இருசக்கர வாகன ரோந்து

திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி கொள்ளையை தடுக்க இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். எனினும், கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அந்த வாகனரோந்து பணியை மாற்றி அமைத்துள்ளார்.

மேலும் ரோந்து செல்வதற்கு கூடுதலாக இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு, போலீசாரும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல் சிவப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டு, ரோந்து வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து திண்டுக்கல் நகர், புறநகர் உட்கோட்டங்களில் புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகன ரோந்து பணியை, சீலப்பாடி மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று தொடங்கி வைத்தார்.

24 மணி நேரமும் ரோந்து

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்கும் வகையில் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்வார் கள். முதல்கட்டமாக திண்டுக்கல் நகர், புறநகர் உட்கோட்டங்களில் இன்று (நேற்று) தொடங்கப்பட்டது. இந்த பகுதிகளில் 20 வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து செல்வார்கள்.

இந்த வாகன ரோந்து பணியை அந்தந்த உட்கோட்ட துணை சூப்பிரண்டுகள் நேரடியாக கண்காணிப்பார்கள். வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், நகைக்கடைகள், கடைவீதி அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். இந்த ரோந்து போலீசார் மக்களுடன், மக்களாக பழகி தகவல்களை சேகரித்து குற்ற சம்பவங்களை தடுப்பார்கள்.

தகவல் தெரிவிக்கலாம்

ஒவ்வொரு பகுதிக்கும் 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் செல்போன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்மூலம் பொதுமக்கள் ரோந்து போலீசாரை தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்துவார்கள்.

மேலும் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையிலும் ரோந்து போலீசார் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சிறு, சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வருவதை தவிர்க்கலாம். இதன் தொடர்ச்சியாக பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களிலும் வாகன ரோந்துதீவிரப்படுத்தப்படும்.

‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார்

இதுமட்டுமின்றி மாவட்ட போலீசுக்கு ‘வாட்ஸ்-அப்’ எண் 99949 34488 அறிமுகப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங் கள், அது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனே வாட்ஸ்அப் மூலம் போலீசுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் தனிப்பிரிவு அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ரோந்து, ‘வாட்ஸ்-அப்’ புகார் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்ற சம்பவங்கள், தகவல்களை உடனுக்குடன் போலீசாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கள்ளத்துப்பாக்கி பற்றியும் மக்கள்தகவல்தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், வனிதா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அய்யாத்துரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனுமதியின்றி பெட்ரோல், மது விற்பனை: பெண் உள்பட 6 பேர் கைது


வடமதுரை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை செய்ததாக சுக்காம்பட்டியில் காளிச்சாமி (வயது 45), எஸ்.குரும்பபட்டியில் பழனிவேல் (31), கொம்பேறிபட்டியில் காந்தி (55), அக்கலன் (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் பூசாரிபட்டியில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கமலாராணி (35) என்ற பெண்ணையும், வேங்கனூரில் புதுப்பட சி.டி.க்களை திருட்டுத்தனமான விற்பனை செய்த சரவணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கல் குவாரியில் டிராக்டர் பறிமுதல்

ரெட்டியார்சத்திரம்:ரெட்டியார்சத்திரம் கே.புதுக்கோட்டையில் உள்ள ஒருகுவாரியில் அனுமதி காலம் கடந்தாண்டு ஆகஸ்டில் முடிந்தது. தொடர்ந்து செயல்பட்டதால் அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார் சென்றது. அவர்களின் எச்சரிக்கைக்கு பின்பும் தொடர்ந்து செயல்பட்டது. நேற்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ., உத்தமன் தலைமையில், ரெட்டியார்சத்திரம் ஆர்.ஐ., வேல்முருகன், வி.ஏ.ஓ., ரேணுகாதேவி அங்கு சென்றனர். அங்கு பணிகளை நிறுத்திய அவர்கள், டிராக்டரை பறிமுதல் செய்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.மாவட்ட நிர்வாகம் இப்பகுதி குவாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்

பத்திரிகை படிக்க ஆலோசகர் அறிவுரை

பழநி: பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தலைவர் ஜனார்த்தனன் தலைமைவகித்தார். முதல்வர் சரவணன் முன்னிலைவகித்தார். இதில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்று எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளன. கண்பார்வையில்லாத பெண் ஐ.ஏ.எஸ்., படித்து சாதனை படைக்கும்போது, நம்மால் ஏன் முடியாது. மாணவர்கள் முழுமுயற்சிசெய்தால் சாதிக்க முடியும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு செல்லும் முன், அங்குசென்று துறைகளை தேர்வுசெய்வது எப்படி என முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தினமும் பத்திரிகை படித்தால், எந்த துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன என அறியலாம், என்றார்.

விளையாட்டு போட்டி

                  

கொடைக்கானல்:கொடைக்கானல் பெருமாள்மலையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் கலாசார கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் வென்ற சுயஉதவிக்குழுக்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு பி.டி.ஓ., பட்டுராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் ஆர்.ஏ.பொன்னுதுரை முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார். அடுக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, சேர்முகராஜன், சுப்ரமணியன், தங்கவேல் கலந்து கொண்டனர்.

"டெங்கு' பாதிப்பு வீடுகளில் கலெக்டர் ஆய்வு

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்ட கலெக்டர் ஹரிஹரன், சுகாதாரத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார். வத்தலக்குண்டில் 2 மாதங்களில் "டெங்கு'வால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்து உள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இப்பகுதிகளை நேற்று கலெக்டர் ஹரிஹரன் ஆய்வு செய்தார். வ.உ.சி., நகரில் "டெங்கு'வால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார். அவரிடம் பொதுமக்கள், "கழிவுநீர் வடிகால் வசதியில்லை, பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்தில் பாரபட்சம் காட்டுகிறது என, புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து குறைகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்ட கலெக்டர், ""துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்ப தரவேண்டும். அப்போதுதான் "டெங்கு'வை முழுமையாக ஒழிக்க முடியும்'' என்றார்.

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

              


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சரவணன் எஸ்.பி., கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 100 இடங்கள் காலியாக உள்ளன. 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை திண்டுக்கல், பழநி ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெறலாம். அதை பூர்த்தி செய்து ஜன., 24 க்குள் வழங்க வேண்டும். சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஜன., 30 ல் நேர்முத்தேர்வு நடக்கும். விபரங்களுக்கு 0451 2420234 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

மல்லிகையில் வெள்ளைக்கொசுநூல்புழு தாக்குதலால் பாதிப்பு


     

 




திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லிகையில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, நிலக்கோட்டை, ஏ.வெள்ளோடு, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் உட்பட பல கிராமங்களில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. கடந்த வாரம் வரை மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அதிகளவு பனிப் பொழிவு காணப்படுகிறது. மல்லிகைப்பூவில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை.எனவே வெள்ளைக்கொசு தாக்குதலில் இருந்து செடிகளை காக்க அசிட்டியா பிரைடு, நூல்புழு தாக்குதலில் இருந்து செடிகளையும், பூக்களையும் பாதுகாக்க புரோபைபாஸ், கார்டா ஹைட்ரோகுளோரைடு வாங்கி வாரம் இருமுறை விவசாயிகளே தெளித்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையினர் களப்பணிக்கு ஆய்வுக்கு சென்று நேரடியாக ஆலோசனை வழங்கினால் மட்டுமே அது முறையானதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் களப்பணியில் 2,078 அலுவலர்கள் :சாகுபடி விபரம் "டேப்லெட்'டில் பதிவு

திண்டுக்கல்:விவசாய துறையில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க, 2078 உதவி வேளாண் அலுவலர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிர்களின் சாகுபடி விபரங்கள் உடனுக்குடன் "டேப்லெட்'டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.விவசாய துறையில், "இரண்டு மடங்கு உற்பத்தி, முன்றுமடங்கு வருமானம்' என்ற குறிக்கோளுடன் அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 110 மெ., டன்னை எட்டியதை பாராட்டி
மத்திய அரசு கிர்ஷிகர் மன் விருதும், ரூ.2 கோடி ரொக்கப்பணமும் வழங்கியது.
இந்தாண்டு இலக்காக 145 மெ., டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக ஜன.5 முதல் விவசாயிகளுக்கான நிரந்தர பயண திட்டம் துவங்கியுள்ளது. இதில் ஆயிரக்
கணக்கான அலுவலர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். திண்டுக்கல் விவசாய இணை இயக்குனர் சம்பத்குமார் கூறியதாவது: விவசாய உதவி அலுவலர்கள் தங்கள் பகுதி விவசாயிகளை சந்தித்து சாகுபடி குறைபாடுகளை கேட்டறிய வேண்டும். அதிலுள்ள பிரச்னைகளை, "டேப்லெட்'டிலுள்ள எப்.சி.எம்.எஸ்., மென்பொருள் உதவியுடன், வேளாண் இயக்குனரகம், மற்றும் காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம், வேளாண் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைப்பர். இதன்மூலம் ஆராய்ச்சியாளர், உயரதிகாரிகள் ஆலோசனை பெற்று சாகுபடி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதனால் உணவு உற்பத்தியில் விரைவாக தன்னிறைவு பெற முடியும். இதற்காக தமிழகம் முழுவதும் விவசாய துறையில் 379யூனியன்கள், தோட்டக் கலைத்துறையில் கொடைக்கானல், ஊட்டி, விழுப்
புரம், வெள்ளிமலை என 6 பகுதிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்பணியில் 2078 உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.இப்பணியிடங்களில் 360 காலியிடங்கள் உள்ளதால் அதை சமாளிக்க, தோட்டக்கலை துறையிலிருந்து 275 உதவி வேளாண் அலுவலர்களும், அட்மா திட்டத்தில் 85 அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.'' என்றார்.

கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை எதிரொலி: பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

                 



கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை எதிரொலியாக பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளுக்கு நீர் வரத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வரத்து கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழனி பாலாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 58.07 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல் வரதமாநதி அணையின் மொத்த உயரமான 66.47 அடியில், தற்போது 57.58 அடிவரை தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குதிரையாறு அணையின் மொத்த உயரமான 79.99 அடியில் தற்போது 67.88 அடியாக உள்ளது. வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நங்காஞ்சியாறு அணையின் மொத்த உயரமான 40 அடியில் தற்போது 19.75 அடிவரை தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
பழனி நகரின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
குடியரசு தினவிழா ஆலோசனை குடியரசு தினவிழா கொண்டாட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
அரசு பஸ் வசதிவருகிற 26–ந்தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடக்கிறது. இதையொட்டி, திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் மைதானத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குடியரசு தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். அதேபோல் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
போலீஸ் தீவிர கண்காணிப்பு எனவே, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, கலெக்டர் அலுவலக மேலாளர் தாஜுதீன், ஆர்.டி.ஓ. உத்தமன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
--–
குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நடந்த போது எடுத்தபடம்.

மாவட்டம் முழுவதும் 567 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி கலெக்டர் ஹரிகரன் தகவல்



            


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 567 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் செயற்குழு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 567 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், 17 சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
அதேபோல் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சிறப்பு மையங்களில் பயிற்சி பெற்ற 3 பேர் தற்போது பிளஸ்–2, கல்லூரி, தொழிற்நுட்ப கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி உபகரணங்கள் எனவே, சிறப்பு பயிற்சி மையங்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழிற்கல்வி உபகரணங்களை வாங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும். அதோடு மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் விவரங்களை பெறும் வகையில், அவசர உதவி தொலைபேசி எண்கள், முகவரி கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சீத்தாராமன், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அறிவழகன், தொழிலாளர் ஆய்வு அலுவலர் முருகன், தொழிற்சாலை ஆய்வு அலுவலர் சுதாராஜன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திண்டுக்கல்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்–ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல்லில் பழனி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பின் திண்டுக்கல் நகர தலைவர் விஜயரெங்கன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜோதிநாதன் வரவேற்றார்.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட தலைவர் சிவகுருநாதன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். எல்.ஐ.சி.கோட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் வாழ்த்தி பேசினார்.
பல்வேறு கோரிக்கைகள் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:–
காலிப்பணியிடங்களில் புதிதாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தனியாக இயக்கப்படும் பி.பி.என்.எல். ( இணையதள சேவை) நிறுவனத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைக்கப்பட வேண்டும். வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு தேவையான கருவிகள், கேபிள்கள், ஆப்டிக் பைபர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கப்பட வேண்டும். 4 ஜி சேவையை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல். பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திண்டுக்கல்லில் தொடரும் அவலம்: குழாய் உடைப்பினால் வீணாகும் தண்ணீர்

 






திண்டுக்கல்,
திண்டுக்கல்லில், குழாய் உடைப்பு காரணமாக சாலை, தெருக்களில் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
குடிநீர் குழாய் உடைப்பு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்விரு திட்டங்களின் மூலம் கிடைக்கிற தண்ணீரை சீராக வினியோகம் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.
தற்போது ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி வழிந்த போதிலும், திண்டுக்கல் நகரில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதே வாடிக்கையாக உள்ளது. இதற்கு வினியோக முறையில் ஏற்பட்ட குளறுபடியும், குழாய் உடைப்புமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் நகரில் குழாய் உடைப்பு இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குழாய்கள் உடைந்து சாலை, தெருக்களில் தண்ணீர் வீணாக ஓடுவது அன்றாட காட்சியாகி விட்டது.
வீணாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சுற்றுச்சுவரையொட்டி பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறி தண்ணீர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.
அலுவலக வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து சென்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதுமட்டுமின்றி குழாய் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர், பழனி ரோட்டின் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் வீணாக சென்றது. குடிநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலந்தது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் மாநகராட்சி நிர்வாகம் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக அங்கு சென்று சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகையில்லா பொங்கல் திருநாள்: கழிவுகளை சேகரிக்க துப்புரவு முகாம் கலெக்டர் ஹரிகரன் தகவல்


திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பற்றி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை தினத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் வெளியேற்றப்படும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள், தலையணைகள், பாய்கள் உள்ளிட்ட கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து, டையாக்சின் மற்றும் பியூரான் போன்ற அபாய நச்சு எரிவாயுக்கள் வெளிப்பட்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.
 
                    
இதை தவிர்க்க நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14–ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடக்க இருக்கிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினரை கொண்டு ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் வந்து கழிவுகளை வாங்கி புகையில்லாத பொங்கல் நாளாக உருவாக்க உள்ளனர். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்த 83 கிலோ எடை கொண்ட பிரமாண்ட பூசணிக்காய்





திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா (வயது 27). இவர் அபிராமி அம்மன் கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். பொங்கலையொட்டி வியாபாரம் மும்முரமாக நடக்கும் என்பதால், திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூருக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கினார்.
அப்போது ஏராளமான பூசணிக்காய்களையும் அவர் வாங்கினார். அவர் வாங்கிய பூசணிக்காய்களில் ஒரு பூசணிக்காய் மட்டும் 83 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த பிரமாண்ட பூசணிக்காய் குறித்து ஜீவா கூறும்போது, ‘பொதுவாக அதிகபட்சமாக ஒரு பூசணிக்காயின் எடை 15 கிலோ முதல் 20 கிலோ வரை இருக்கும். தற்போது, 83 கிலோவில் பூசணிக்காய் விளைந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பூசணிக்காயை பொங்கலையொட்டிதான் விற்பேன். அதுவரை இதை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருப்பேன்’ என்றார். தற்போது, பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அந்த பூசணிக்காயை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். வெளிநாட்டில் பல நூறு கிலோ எடை கொண்ட பூசணிக்காய்கள் விளைவது சகஜம் என்றாலும், திண்டுக்கல்லில் விற்பனைக்காக வந்த 83 கிலோ பூசணி பொதுமக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஹரிகரன் தகவல்


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியில் இடைநிரவல் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டியை கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார். அதேபோல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நெசவாளர்களுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணியையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 83 ஆயிரம் செலவில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி, ரூ.14 லட்சத்து 43 ஆயிரம் செலவில் கிராமசேவை மையம் கட்டும் பணி ஆகியவற்றையும் கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார்.

 
இதையடுத்து கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது:–
பசுமைவீடுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் 2014–2015–ம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 2 ஆயிரத்து 172 பசுமை வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் 635 வீடுகள் ரூ.27 கோடியே 36 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு 115 பசுமை வீடுகள் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் தாய் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 46 லட்சம் மதிப்பில் 2,556 பணிகளும், இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் ரூ.14 கோடியே 40 லட்சம் மதிப்பில் 1,200 பணிகளும், 13–வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பில் 30 பணிகளும் நடக்கின்றன.
ரூ.265 கோடியில் பணிகள் நிர்மல்பாரத் அபியான் திட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு 74 ஆயிரத்து 311 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 4,473 பேருக்கு ரூ.4 கோடியே 65 லட்சம் செலவில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தில் ரூ.19 கோடியே 30 லட்சம் செலவில் 781 பணிகளும், ஊரக கட்டமைப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 63 லட்சத்தில் 240 பணிகளும் நடக்கின்றன.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சத்தில் 5 ஆயிரத்து 165 பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிதிஆண்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடியே 96 லட்சம் மதிப்பில் 89 ஆயிரத்து 493 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 671 பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாண்டியராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலாதேவி, துணைத் தலைவர் லோகநாதன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், கிரிராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.