Monday, 17 November 2014

2 மாதமாக வீணாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர்


 
 
 
 
 
 
 
 
 
 
வேடசந்தூர் அருகே திண்டுக்கல்லுக்கு செல்லும் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணறு

கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் ரெங்கநாதபுரத்தில் நீர் உறிஞ்சும் கிணறு அமைக் கப்பட்டுள்ளது. இந்த கிணறு 13.92 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்டது. இதிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு ஜெகதாபி, பாளையம் ஆகிய இடங்களில் உள்ள நீர் உந்து நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த 2 இடங்களில் தரைமட்ட நீர்த்தேக¢கத் தொட்டியின் கொள்ளளவு 8 லட்சம் லிட்டர் ஆகும்.

இங்கிருந்து ஒரு குழாய் மூலம் ஒட்டன்சத்திரம் வரை உள்ள கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது. மற்றொரு குழாய் மூலம் திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் திடீர் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக செல்கிறது.

மேலும் ரோடு ஓரத்தில் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடைப்பு

மழை நேரங்களில் கழிவுநீர் இந்த பள்ளத்திற்குள் சென்று அங்குள்ள குடிநீரில் கலப்பதால் மாசு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களாகியும் குழாய் சரி செய்யப்படவில்லை. திண்டுக்கல் பொதுமக்களின் நலன் கருதி கோவிலூரில் உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை உடனடியாக சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment