Monday, 17 November 2014

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.30 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


 
 
திண்டுக்கல்,

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.30 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேசிய மயமாக்கப்பட்ட 170 வங்கி கிளைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் மேலாளர், அதிகாரிகள் உள்பட 400 பேரும், 700 ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் 170 பேர் பெண் ஊழியர்கள் ஆவர்.

வெறிச்சோடிய வங்கிகள்

வேலை நிறுத்தம் எதிரொலியாக, திண்டுக்கல் நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தன. சில வங்கிகள் திறந்திருந்தன. ஆனாலும் ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் வெறிச் சோடிகாணப்பட்டன.

வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை, பண பரிமாற்ற சேவை முற்றிலும் முடங்கியது. சிறு, குறு தொழில் செய்வோர், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

வங்கி பணிகள் முடங்கிய போதிலும், திண்டுக்கல் நகரில் ஏ.டி.எம். மையங்கள் வழக்கமாக செயல்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து சென்றனர்.

ரூ.30 கோடி பணபரிவர்த்தனை

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் முருகேசன் கூறும்போது, 9 வகையான சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.30 கோடி அளவில் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில், டிசம்பர் மாதத்தில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்றார்.

ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் போராட்டத்தையொட்டி திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயகோபால் தலைமை தாங்கினார். தேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் கிளை செயலாளர் தங்கமுத்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் தர்மர் மற்றும் ஏராளமான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது வங்கி ஊழியர்களுக்கு 10-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், வங்கித்துறையில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment