Monday, 17 November 2014

சிறுமலை பகுதியில் போதிய மழை இல்லாததால் வறண்டு வரும் ராமக்கால் அணை விவசாயிகள் கவலை




    



சிறுமலை பகுதியில் போதிய மழை இல்லாததால் அடிவாரத்தில் உள்ள ராமக்கால் அணை வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராமக்கால் அணை

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை கிழக்கு பகுதியில் பெய்யும் மழைநீர் வெள்ளோடு பெரிய கண்மாய்க்கு வந்து நிரம்பி அங்கிருந்து மதுரை 4 வழிச்சாலை அருகே உள்ள ராஜாகுளம் செல்லும். பின்னர் அங்கிருந்து குடகனாற்றில் சேர்ந்து வேடசந்தூர் அழகாபுரி அணைக்கு செல்கிறது. வெள்ளோடு பெரிய கண்மாயில் மட்டும் தண்ணீர் தேங்குவதால் சிறுமலை அடிவாரப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற முடியாமல் இருந்தது.

இதனால் இந்த பகுதி மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு பின்னர் சிறுமலை அடிவாரத்தில் ராமக்கால் ஓடை, ஆணைவிழுந்தான் ஓடை ஆகிய ஓடைகளின் குறுக்கே ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பில் 3 மதகுகள் அமைத்து ராமக்கால் அணை கட்டப்பட்டு 2008-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

தூர்வாரப்படவில்லை

அணை கட்டிய பின்னர் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள மண் மேடுகள் அகற்றப்படாமலேயே இருந்தது. இதனால் மழைக்காலங்களில் போதிய தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. அணை தூர்வாரப்படாததால் தேக்கி வைத்த தண்ணீரும் 3 மாதத்தில் வற்றிவிட்டது. மேலும் 2011-க்கு பின்னர் சிறுமலையில் போதிய மழை பெய்யாததால் ராமக்கால் அணை வறண்டு போனது.

இதனால் இந்த அணையை நம்பி இருந்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தங்களது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டி விவசாயம் செய்து வந்தனர். கடந்த ஆண்டு மழையே பெய்யாததால் இப்பகுதியில் ஆயிரம் அடிக்கும் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. விவசாயிகள் தங்களது நிலத்தில் 1500 அடி ஆழம் வரை ஆழ்குழாய் தோண்டியும் சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பராமரிப்பு இல்லை

இதனிடையே கடந்த 3 ஆண்டுகள் தண்ணீர் இல்லாமல் ராமக்கால் அணை வறண்டு போனதால் பராமரிப்பு இன்றி அணை முழுவதும் முள்செடிகள் ஆக்கிரமித்து விட்டது. சமூக விரோதிகள் 3 மதகுகள் அருகே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை திருடி சென்றுவிட்டனர். காவலர் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடமும் காவலர் நியமிக்கப்படாததால் பராமரிப்பு இன்றி பழுதடைந்து விட்டது.

ராமக்கால் அணை வறண்டு காணப்படுவதால் சிறுமலை அடிவாரத்தில் உள்ள மற்ற குளங்கள், வெள்ளோடு பெரிய கண்மாய், சின்னாளபட்டி அருகே உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது பொது மக்களும் கவலை அடைந்துள்ளனர்.

அமைச்சர் உத்தரவு

இதனிடையே இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் உத்தரவின் பேரில் தண்ணீர் தேங்கும் பகுதி, கரை பகுதிகளில் ஆக்கிரமித்து இருந்த முள்செடிகளை அகற்றும் பணி பொதுப்பணிதுறையினரால் நடைபெற்று வருகிறது. 3 மதகுகளில் ஒன்றில் மதகு இல்லாமல் இருந்தது. அதில் மதகு பொருத்தும் பணி உள்பட பல்வேறு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment