திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா (வயது 27). இவர் அபிராமி அம்மன் கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். பொங்கலையொட்டி வியாபாரம் மும்முரமாக நடக்கும் என்பதால், திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூருக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கினார்.
அப்போது ஏராளமான பூசணிக்காய்களையும் அவர் வாங்கினார். அவர் வாங்கிய பூசணிக்காய்களில் ஒரு பூசணிக்காய் மட்டும் 83 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த பிரமாண்ட பூசணிக்காய் குறித்து ஜீவா கூறும்போது, ‘பொதுவாக அதிகபட்சமாக ஒரு பூசணிக்காயின் எடை 15 கிலோ முதல் 20 கிலோ வரை இருக்கும். தற்போது, 83 கிலோவில் பூசணிக்காய் விளைந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பூசணிக்காயை பொங்கலையொட்டிதான் விற்பேன். அதுவரை இதை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருப்பேன்’ என்றார். தற்போது, பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அந்த பூசணிக்காயை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். வெளிநாட்டில் பல நூறு கிலோ எடை கொண்ட பூசணிக்காய்கள் விளைவது சகஜம் என்றாலும், திண்டுக்கல்லில் விற்பனைக்காக வந்த 83 கிலோ பூசணி பொதுமக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment