Tuesday, 4 August 2015

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2–ம் கட்டமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தக்கலை பகுதியில் காவிரி ஆற்றுப்படுகையில் குழாய் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அவ்வாறு தண்ணீர் கொண்டு வரும் போது வழியில் ஆங்காங்கே குடிநீரை சேகரிப்பதற்கு நீர்உந்து நிலையம் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளன. பின்னர் அந்த தண்ணீர் மாவட்டத்தில் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பெறப்படும் தண்ணீரின் அளவு போதுமானதாக இல்லை. இதனால் மாவட்டத்தில் பிற ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
    
2–ம் கட்ட திட்ட பணிகள் இதனைக் கருத்தில் கொண்டு தற்போது கரூர் மாவட்டம் காவிரி ஆற்று படுகையில் மாயனூர் என்னுமிடத்தில் இருந்து 2–ம் கட்டமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அந்த பகுதியில் ஆய்வு பணிகள் நடந்தது. இதைத் தொடர்ந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2–ம் கட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் நத்தம், ஆத்தூர் போன்ற பகுதிகள் குடிநீர் வினியோகம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகளை தீவிரமாக செயல்படுத்தும் பணி வடமதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத இரும்பு குழாய்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்ட பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் கேட்ட போது, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2–ம் கட்டமாக குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக பல்வேறு பகுதிகளில் குழாய்களை பதிப்பதற்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றனர்.

No comments:

Post a Comment